டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இஸ்லாமியர்களுக்கு உண்மையான பிரச்னை கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு. பாப்ரி (மசூதி) அல்ல, பராப்ரி (சமத்துவம்). அனைவருக்கும் நீதிமன்றத்தை நாட, கருத்து சுதந்திரத்தை கொண்டிருக்க முழு உரிமை உண்டு.
உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பால் பல ஆண்டுகளாக இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ஒரு சிறந்த சூழ்நிலை நிலவுகிறது. சமுகத்தின் அனைத்து பிரிவுகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கின்றன. இந்த தீர்ப்பால் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஜீரணிக்க முடியாமல் சிலர் நடப்பது வருத்தமளிக்கிறது. எந்தவொரு சமூகமும் ஏற்றுக்கொள்ளாத பிளவை ஏற்படுத்த அவர்கள் முனைகின்றனர். இது அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட குரல். ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக இருக்க முடியாது.
இது ஒரு சிவில் வழக்கு, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு இதுபுரியும். மசூதி கட்ட நிலம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் அவர்கள் அறிவார்கள். ஆனால் இடையில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அயோத்தியில் ஒரு மசூதி அல்ல, ஏராளமான மசூதிகள் உள்ளன. இவ்வாறு நக்வி கூறினார்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கும், இஸ்லாமியர்கள் மசூதிக் கட்டிக்கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து பல ஆண்டுகளாக தொடர்ந்த பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த தீர்ப்பை சம்மந்தப்பட்ட சன்னி வக்ஃபு வாரியம் ஏற்றுக்கொண்ட நிலையில், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தீர்ப்பை எதிர்ப்பு மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வருகிற 9ஆம் தேதிக்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவ்வமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மனுதாக்கல் செய்ய முடிவு.!