ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்குப் பிறகு, இருபெரும் சக்திவாய்ந்த நட்பு நாடுகளின் தலைவர்கள் கூடும் நிகழ்ச்சியை உலகம் பார்க்க உள்ளது. அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் அந்நாட்டு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் அரசுமுறைப் பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 1.25 லட்சம் பேர் கூடவுள்ளனர். இதற்காக, குஜராத் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு வரவுள்ள 1.10 லட்சம் பேர் மைதானத்தின் காலரிகளில் அமர்வதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள் உள்பட மீதமுள்ள 10 ஆயிரம் விவிஐபிக்கள் அமர்வதற்கு மைதானத்தின் நடுவே மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே திரும்பிப் பார்க்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.