பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். தனது மனைவி மெலனியாவுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வரும் அமெரிக்க அதிபருக்காக அவர் இதுவரை கண்டிராததும், இனியும் காணமுடியாத அளவுக்கு மிக பிரமாண்டமான கலாச்சார களியாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிப்ரவரி 12ஆம் தேதியன்று வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் தனது இந்தியப் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, இந்திய அரசின் பயண ஏற்பாடுகளை புகழ்ந்து பேசினார் ட்ரம்ப். இந்தியாவுக்கு வந்த பிறகு புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சர்தார் பட்டேல் விளையாட்டு அரங்கை திறந்துவைத்து பிரதமர் மோடியுடன் உரையாற்ற உள்ளார். வழி நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு தரவுள்ளதாகவும் பெருமையுடன் கூறிய ட்ரம்ப், விளையாட்டு அரங்கத்தில் கூடவுள்ள ஒரு லட்சம் பார்வையாளர்களிடம் உரை நிகழ்த்தப்போவதாகவும் குறிப்பிட்டார்.
டெல்லியில் குறிப்பிடத்தக்க வர்த்தக ஒப்பந்தமும், பாதுகாப்பு உபகரண கொள்முதல் ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவுள்ளன. இரு நாட்டு தலைவர்களும் தங்களது நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள், பிராந்திய பிரச்னைகள், உலக பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
2016ஆம் ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து உலகலாவிய போர்திறன் கூட்டமைப்பை ஒன்றை உருவாக்கின. இதையடுத்து, இந்தியாவிற்கு அமெரிக்கா பெரிய பாதுகாப்புக் கூட்டாளர் தகுதியை அளித்ததின் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளிகளுக்கும், பங்காளர்களுக்கும் இணையாக மதிக்கத் தொடங்கியது. 2005ஆம் ஆண்டு வரை இந்தியா எந்தவித பாதுகாப்பு சாதனங்களையும் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்ததில்லை.
ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டாளராக உருவெடுத்தது. அதன் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்கா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது. தற்போது இதுபோன்ற பல ஒப்பந்தங்களை கையெழுத்திடும் நிலையில் இரு நாடுகளும் உள்ளன.
இதையும் படிங்க: ட்ரம்ப்பின் வருகைக்காக காத்திருக்கும் தாஜ்மஹால்... பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின்போது அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் எண்டர்பிரைஸ் விமானம் தாங்கி போர் கப்பலை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி பாகிஸ்தான் கொடுங்கோள் ஆட்சிக்கு எதிராக போராடும் வங்காள தேச விடுதலை போராட்ட வீரர்களுக்கு இந்தியா உதவுவதை தடுத்து நிறுத்த நினைத்தது தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் நம்பமுடியவில்லை. அதுமட்டுமில்லாமல் தனது புதிய நண்பனான சீனாவை, இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்கா முயற்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இரு நாடுகளுக்கும் நீடிக்கும் நெருக்கமான நட்புறவிலும் ஒரு சிறு விரிசலாக 1998இல் அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஒன்று அமைந்தது. 1998ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா அணு ஆயுத சோதனை செய்தபோது அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆனால் இந்திய வெளியுறவுத் துறை ஆமைச்சர் ஜஸ்வந்த் சிங், அமெரிக்க உள்துறை அமைச்சர் ஸ்ட்ரோப் டேல் போத் இடையே 1998 முதல் 2000 வரை மூன்று கண்டங்களில் உள்ள ஏழு நாடுகளில் நடைபெற்ற 14 பரந்த உரையாடல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை நீக்கி ஒரு புதிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தது.