உரிமைகள் மறுக்கப்படும், பொதுச் சமூகத்தால் ஒதுக்கப்படும் சமுதாயமாக மூன்றாம் பாலினத்தவர் என்ற இனம் நீண்டகாலமாக வாழ்ந்துவருகின்றனர். சமீப காலமாகத்தான் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நீதி, பொறியியல், காவல், திரை என பல்வேறு துறைகளிலும் அவர்கள் சாதித்துவருகின்றனர். அப்படியான ஒரு நெகிழ்ச்சிகரமான விஷயம்தான் இப்போது நடந்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர் சங்கத் தேர்தலில் திருநங்கை வெற்றி!
சென்னை: திருநங்கை நலீனா பிரஷீதா, லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் இணைச் செயலாளராகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
லயோலா கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கிறார் திருநங்கை நலீனா பிரஷீதா. கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் 320-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவிலேயே முதன்முதலாக மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற திருநங்கை என்ற பெயரை பெற்றுள்ளார். இவர் லயோலா கல்லூரியில்தான் இளங்கலை பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த நலீனா, லயோலா கல்லூரி என் தாய் போல; எனக்கு அன்பையும் அரவணைப்பையும் அளித்தது. ஆசிரியர்கள், நண்பர்கள் அளித்த ஆதரவு எனக்கு நம்பிக்கையை அளித்தது. அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என தெரிவித்துள்ளார்.