ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் வெவ்வெறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் விதமாக மத்திய அரசு கடந்த மே 1ஆம் தேதி சிறப்பு ரயில் சேவை வசதியைத் தொடங்கியது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முடங்கியிருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள், ரயில் தண்டவாளத்தின் வழியாக ஜல்னா பகுதியிலிருந்து தங்களது சொந்த ஊரான புஷாவல் நோக்கி சென்றனர். நீண்ட நேரம் நடந்துச்சென்றதால் அசதியில் அவர்கள் அவுரங்பாத் தண்டவாளத்தில் தூங்கினர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறிச் சென்றது. இதனால், தொழிலாளர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவுரங்கபாத் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் செய்தி அறிந்ததும் மிகவும் வருத்தமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு