இந்தநிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் 18 வயது மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலானது.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சனா பதிவு அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும், குழுக்களும், இனங்களும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் அரக்கத்தனத்தை செழிப்படையச் செய்ய முடியும். இது ஒரு குழு அல்லது இரண்டு குழுக்களிலிருந்து தொடங்கும். ஆனால், இது ஒருபோதும் முடிவடையாது. வெறுப்பின் மீது ஒரு இயக்கம் கட்டமைக்கப்படும்போது, அது தொடர்ச்சியாக அச்சத்தையும் கலவரத்தையும் உருவாக்குவதன் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
இந்த முட்டாள்களின் சொர்க்கத்தில் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் இல்லாததன் காரணமாக நாமெல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். சங்பரிவாரங்கள் ஏற்கெனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும், மேற்கத்திய இளைஞர்களையும் குறிவைத்துள்ளனர்.
மேலும், நாளை அந்த வெறுப்பு பெண்கள் ஸ்கர்ட் அணிவதன் மீதும், மாமிசங்களை உண்பவர்கள் மீதும், மது அருந்துபவர்கள் மீதும், வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் மீதும் திரும்பக் கூடும். 'ஜெய்ஸ்ரீராம்' முழக்கத்தை எழுப்புவதற்கு பதிலாக முத்தமோ அல்லது கைக்குலுக்கலோ செய்பவர்கள் யாருக்கும் இங்கே பாதுகாப்பு இல்லை என்ற காலம் விரைவில் வரத்தான் போகிறது. இந்தியா உயிர்ப்புடன் இருக்கும் என்று நாம் நம்பினால், இதனை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்' என்று எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய 'இந்தியாவின் முடிவு' (The End of India) என்ற புத்தகத்தில் உள்ளவற்றைப் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தயவு செய்து இந்த பிரச்னைகளிலிருந்து சனாவை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதிவு உண்மையல்ல. அவள் இன்னும் சிறிய பெண் தான். அவருக்கு அரசியல் பற்றி தெரிந்துகொள்ள அனுபவம் இல்லை' எனப் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கங்குலியின் மகள் சனா தற்போது வாக்களிக்கும் வயதுக்கு வந்துவிட்டார். அவர் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க கங்குலி அனுமதிக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சனா கூறிய கருத்துகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று’ என்று சனாவுக்கு ஆதராவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.