2020ஆம் ஆண்டு பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஷிரோமணி அகாலி தளம் கட்சி தங்களுக்கே ஆதரவளிக்குமென பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் பாதலுடன் மாநாடு ஒன்றில் இன்று கலந்துகொண்ட நட்டா, அக்கட்சி பாஜகவுடன் அரசியல் ரீதியான கூட்டணியைத் தாண்டி, உணர்ச்சிப்பூர்வமான கூட்டணியைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். ஷிரோமணி அகாலி தளம் கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ள நட்டா, பாஜகவுக்கும், அக்கட்சிக்குமிடையேயான கூட்டணி என்றுமே நிலைத்து நிற்குமென்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக, ஷிரோமணி அகாலி தளம் கட்சிகளுக்கிடையே பல்வேறு முரண்பாடுகள் நீடித்து வந்த நிலையில், இரு தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின் பேசிய சுக்பீர் பாதல் "பாஜக - ஷிரோமணி அகாலி தள கட்சிகளின் கூட்டணி இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் கூட்டணி. மேலும் பஞ்சாப்புக்கும் சீக்கியர்களுக்கும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாஜக - ஷிரோமணி அகாலி தளம் கட்சிகளுக்கிடையே முன்னதாக இருந்த முரண்பாடுகள், தவறான புரிதல்கள் என அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டன. ஷிரோமணி அகாலி தளம் கட்சி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தன் முழு ஆதரவினையும் பாஜகவுக்கு அளிக்கிறது" என்று கூறினார். சுக்பீர் பாதலின் இந்த அறிவிப்பு சீக்கிய சமூகத்தின் வாக்கு வங்கியில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்