கரோனா பரவலைத் தடுக்க மருத்துவர்கள் போராடிவரும் நிலையில், அவர்களது பாதுகாப்புக்கு அரசு என்ன செய்தது என்று கேட்கும் அளவில் அரசு செயல்பட்டுவருகிறது என ஆந்திர மாநில அரசை மருத்துவர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுதாகர் நரசிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து செலுத்தும் மருத்துவராகப் பணியாற்றிவந்துள்ளார். கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்ததோடு மருத்துவர்களுக்கு N-95 ரக முகக்கவசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
கரோனா தீநுண்மி நோயாளிகளுடன் போராடிவரும் மருத்துவர்கள், நோய் பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் பாதுகாப்புக்காக N-95 ரக முகக்கவசம் வேண்டும் என்று இவர் கேட்ட இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவிதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மருத்துவமனை அவரை பணியிடைநீக்கம் செய்தது.
இதனைக் கண்டித்து மருத்துவர் சுதாகர் கடந்த 16ஆம் தேதி போர்ட் மருத்துவமனை முன்பு மேல்சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்தப் போராட்டத்தையடுத்து பொதுமக்களில் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் துறையினர் அவரை கயிற்றினால் கட்டி அடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
சுதாகரிடம் விசாரணை செய்தபோது அவரின் பேச்சில் வித்தியாசத்தை உணர்ந்த காவல் துறையினர் அவரை அரசு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். அப்போது சுதாகர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.