பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என சில மாதங்களுக்கு முன்பு முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆளும் பாஜக அரசு இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தது. ஆனால் சமூக ஆர்வலர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என திட்டவட்டமாக பதிவு செய்தனர். ஆசிஃபா என்ற சிறுமி (கத்துவா வழக்கு) வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாது மீ டூ இயக்கத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பலர் மீது புகார்கள் எழுந்தன. அதாவது பெண்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு சான்றாக அமைந்தது மீ டூ இயக்கத்தில் எழுந்த புகார்கள்.
பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியா முதலிடம் கிடையாது என மறுப்பு தெரிவித்த ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ ஒருவர் மீது அப்போது பாலியல் வன்புணர்வு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2017 ஜூன் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு. 17 வயதான சிறுமி ஒருவர் உத்தரப் பிரேதச பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தினார். 2 ஆண்டுகளுக்கு மேல் தொடரும் இந்த வழக்கில் குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் சின்னாபின்னமாகியிருக்கிறது.
உன்னாவ் வழக்கு ஒரு பார்வை:
ஜூன் 2017: பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுமி குற்றம்சாட்டினார்.
ஜூன் 2017 -ஏப்ரல் 2018: காவல் துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுப்பதாக கூறிய சிறுமியின் குடும்பத்தினர், நீதிமன்ற உதவியை நாடினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஏப்ரல் 3, 2018: சிறுமியின் குடும்பத்துக்கும், எம்.எல்.ஏ குடும்பத்துக்கும் இடையே தகராறு நடைபெற்றது. இதில் சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். இரு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில், காவல் துறையினர் சிறுமியின் தந்தையை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏப்ரல் 8, 2018: பாதிக்கப்பட்ட சிறுமி லக்னோவில் உள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏவை யோகி ஆதித்யநாத் பாதுகாப்பதாக சிறுமி கூறினார்.
ஏப்ரல் 9, 2018: சிறையில் இருந்த சிறுமியின் தந்தை வாந்தி, வயிற்று வலி காரணமாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர் தாக்கியதால்தான் அவர் மரணமடைந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னதாக சிறுமியின் தங்கையை தாக்கிய எம்.எல்.ஏவின் உதவியாளர்கள் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தந்தை மரணத்தைத் தொடர்ந்து இந்த வழக்கில் காவல் துறையினருக்கு அழுத்தம் அதிகமானது.
ஏப்ரல் 10, 2018: சிறுமியின் தந்தை உடற்கூறாய்வு வெளியானது. அவர் உடம்பில் 14 காயங்கள் இருப்பதாக அந்த உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 11, 2018: காவல் துறையிடம் இருந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உபி அரசாங்கம் உத்தரவிட்டது.
ஏப்ரல் 12, 2018: உன்னாவ் வழக்கு சிபிஐ கையில் ஒப்படைக்கப்பட்டது.
ஜூலை 2018: சிறுமியின் தந்தையை தவறாக சித்தரித்ததற்காக குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் 9 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
ஆகஸ்ட் 2018: சிறுமியின் தந்தை தாக்கப்பட்ட வழக்கில் சாட்சியாக இருந்த யூனூஸ் என்பவர் மரணமடைந்தார். யூனூஸ் மரணத்தில் சந்தேகம் இருந்தபோதும், உடற்கூறாய்வு செய்யாமல் அவரை சீக்கிரமாகவே புதைத்துவிட்டதாக சிறுமியின் மாமா தகவல் தெரிவித்தார்.
பின்னர் கல்லீரல் பாதிப்பால் யூனூஸ் இறந்ததாக காவல் துறை தரப்பு கூறியது.
டிசம்பர் 2018: பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் மீது போலி சான்றிதழ் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹரிபால் சிங் என்பவர் அளித்த புகாரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹரிபால் சிங்கின் மனைவியும் மகனும் உன்னாவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் (போக்சோ சட்டம்) குல்தீப் சிங்கை சிபிஐ அலுவலர்கள் கைதுசெய்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் இந்த வழக்கில் சிறுமியின் குடும்பம் மிகவும் பாதிப்படைந்தது. இதன் உச்சக்கட்டமாக நேற்று சிறுமி மற்றும் அவரது உறவினர் சென்ற காரினை ட்ரக் வண்டி ஒன்று மோதியதில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இந்த விபத்தில் சிறுமியுடன் வந்த இரண்டு அத்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமியின் வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் கவனிக்கப்பட வேண்டியவை:
பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பாக ஒரு ஆயுதம் ஏந்திய காவலர் மற்றும் இரண்டு பெண் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. அதுகுறித்த தகவல்கள் ஏதுமில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உன்னாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வர்மா தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிறுமி பயணித்த காரின் மீது மோதிய ட்ரக்கின் நம்பர் ப்ளேட்டில் உள்ள எண்கள் கருப்பு பெயிண்டால் மறைக்கப்பட்டிருந்தது. எனினும் காவல் துறையினர் ட்ரக் ஓட்டுநரை கைது செய்து அதன் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். ட்ரக்குக்கு சரியாக தவணை செலுத்தாததால் நம்பரை மறைத்து வண்டி ஓட்டுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய ட்ரக் மற்றும் சிறுமியின் கார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றுவரும் உன்னாவ் வழக்கில் இறுதியாக பாதிக்கப்பட்ட பெண்மணியும் மரணிக்கும் தருவாயில் உள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இதுவரை நடந்த மரணங்கள் எல்லாம் மர்ம மரணங்கள் என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இது பாஜகவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள் என சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Beti Bachao, Beti Padhao Yojana என பெண் குழந்தைகளை முன்னேற்றுவதற்கான திட்டங்களை அறிவித்தால் போதாது, அதற்கேற்ப பாஜகவினர் செயல்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பாஜகவை பலரும் சாடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தற்போது நடந்துள்ளது விபத்தல்ல எங்கள் குடும்பத்தை தீர்த்துக்கட்ட குல்தீப் சிங் செங்கரின் ஆட்கள் செய்த சதி. குல்தீப் சிங் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் ஆதரவாளர்கள் எங்களை தொடர்ந்து மிரட்டிவந்தனர் என தெரிவித்துள்ளார். உன்னாவ் வழக்கு முடிவதற்குள் ஒரு குடும்பமே நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு நியாயம் கிடைக்குமா..?