மைசூரு அரண்மனையில் தசரா கொண்டாட்டங்கள் தொடங்கியதை முன்னிட்டு அரச குடும்பத்தின் தலைவரான யதுவீர் கிருஷ்ணாதத்தா சாமராஜா இன்று காலை 10.45 மணி முதல் 11.05 மணியளவில் சிம்மாசனத்தில் ஏறினார்.
இந்த ஆண்டு கரோனா தொற்று அச்சம் காரணமாக மைசூரு அரண்மனையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தசரா திருவிழாவில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் அரண்மனை வளாகத்தில்தான் நடைபெறும்.
இந்த ஆண்டு பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ராஜ தர்பார் நிகழ்ச்சியில் அரச குடும்பத்தின் முக்கிய நபர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.