கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், ஊரடங்கின் மத்தியில் மிக மோசமான மற்றுமொரு ஊரடங்கில் காஷ்மீர் மக்கள் சிக்கியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படதன் பிறகு அம்மாநிலத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், இன்றளவும் காவலில் வைக்கப்பட்டிப்பவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து, இந்தியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போதாவது புரிந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்திதான், இந்த தடுப்புக் காவலில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர் என்றும், இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் கூட தங்கள் கடமைகளை செய்யத் தவறிவிட்டதாகவும் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
மெஹபூபா முப்தியும் பிற மூத்த கட்சியினரும் ஊரடங்கின் மத்தியில் மற்றுமொரு கொடிய ஊரடங்கில் இன்றளவும் சிக்கியுள்ளதாகவும், கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு மேல் நீதிமன்றங்கள் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க தவறியுள்ளதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மே 5ஆம் தேதி முதல் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ், மெஹபூபா முப்தியின் தடுப்புக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு முன்னதாக நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸ் விருந்தினர் மாளிகையில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி தன்னுடைய இல்லத்திற்கே மாற்றப்பட்டார்.
மெஹபூபா முப்தி தவிர, முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, அவரது தந்தை ஃபாரூக் அப்துல்லா ஆகியோரும் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வீடுகளை அடையும் முன் வெற்றுடல்களாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!