மகாராஷ்டிர அரசு குறித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது.
செய்தியாளர் சந்திப்பின்போது, நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலமான மகாராஷ்டிரா குறித்து ராகுல் காந்தியிடம்கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், 'மகாராஷ்டிராவில் நாங்கள் அரசை ஆதரிக்கும் கட்சி மட்டுமே. தவிர முக்கிய முடிவுகள் எடுக்கும் கட்சியாக இல்லை. பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், புதுச்சேரி ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் முடிவெடுக்கும் நிலையில் நாங்கள் உள்ளோம்' என்று பதிலளித்தார்.
இந்தப் பதில் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து, இதற்கு விளக்கமளிக்கும் விதமாக ராகுல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தனது கருத்தை ஊடகங்கள் உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்டுள்ளதாகக் கூறிய அவர், அதே பத்திரிகையாளர் சந்திப்பில் தான் பேசிய விடுபட்ட காணொலியை அந்த ட்விட்டர் பதிவோடு இணைத்துள்ளார்.
அந்தக் காணொலியில், "கரோனா தடுப்பில் மகாராஷ்டிரா மிகவும் கடினமான போரில் ஈடுபடுகிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்.
மத்திய அரசின் முழு ஆதரவும் மகாராஷ்டிராவுக்கு அவசியம். மத்திய அரசின் அனைத்து உதவிகளும் அம்மாநில மக்களுக்குச் செல்வது முக்கியம்" எனக் கூறினார்.
மேற்கண்ட கருத்தை முழுமையாக மறைத்துவிட்டு தேவையற்ற குழப்பத்தை மேற்கொள்ள சில ஊடகங்கள் கருத்து திரிப்பில் ஈடுபடுகின்றன எனவும் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:திருமணத்திற்கு மறுப்பு: காதலியின் பெற்றோரை கொலைசெய்த இளைஞன்!