இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், எனவே மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் இந்தக் கோரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது. கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. மெட்ராஸ் பிரெசிடென்சியில் அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன.
இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றி அறிவித்தார். தமிழ்நாடு தனி மாநிலமாக உருவானதைத் "தமிழ்நாடு நாள்" என்று தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று மொழி வாரியாக மாநிலங்கள் உதயமான நாள். இந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும் நிகழ்வுகள் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்று தமிழ்நாடும் தனி மாநிலமான நாளாகும்.