கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, விதிகளை மீறி டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இஸ்லாமியர்கள் வைரஸை திட்டமிட்டு பரப்பிவருகிறார்கள் போன்ற அபத்தமான, மதவாத கருத்துகளை சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். ஒரு சிலர் செய்த தவறுகளை, ஒட்டுமொத்த சமூகமே செய்ததாகக் கருத முடியாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். இந்நிலையில், கரோனா வைரஸ் நோயை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்பதில் உண்மையில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி தத்தாத்ரேயா ஹோசபள்ளி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், "சமூகத்தின் ஒரு அங்கமே இஸ்லாமியர்கள். ஒரு சிலர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை கூறக் கூடாது. இம்மாதிரியான கருத்துகளைப் பரப்புவது துரதிருஷ்டவசமானது. இந்திய இஸ்லாமியர்களை அரசும் சமூகமும் பார்த்துக் கொள்ளும். ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக, அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இதனை கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அனைவரையும் குறை கூறுவது சரியாக இருக்காது.
வைரஸ் நோய்க்கு எதிரான போரை ஒன்றிணைந்து போராட வேண்டும். இம்மாதிரியான கருத்தை சிலர் பரப்புகிறார்கள் என்றால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சவால் அனைவருக்குமானது. அனைவரும் ஒன்றிணைந்துதான் இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: காதலியைக் காண 600 கிலோ நடந்த காதலன்...