இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், இந்த வருடத்திற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சவுதி அரேபியா அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தவகல் வெளியான பிறகே மத்திய அரசு ஹஜ் பயணம் குறித்து முடிவு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டிற்கான ஹஜ் பயண ஆயத்த பணிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே உள்ள நிலையில், சவுதி அரேபியா அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவொரு உறுதியான தகவலும் வரவில்லை.
ஹஜ் பயணத்திற்காக பதிவு செய்தவர்கள், தங்களது பயணங்களை ரத்து செய்ய விரும்பினால், எவ்வித பிடித்தமும்மின்றி அவர்கள் செலுத்திய முழு தொகையும் திரும்ப செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது
சவுதி அரேபியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்நாட்டில், இதுவரை சுமார் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன்காரணமாக இந்தாண்டு சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வருடம் இந்தியாவில் இருந்து இரண்டு லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருந்தனர்.
உலகின் அதிக இஸ்லாமிய மக்கள்தொகைக் கொண்ட இந்தோனேசியா, இந்த வருடத்திற்கான ஹஜ் பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.