மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு பலப்படுத்தல்
09:53 June 30
மும்பை: இந்தியாவின் நுழைவாயிலுக்கு அருகே அமைந்துள்ள மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேட் வே ஆப் இந்தியா எனப்படும் இந்தியாவின் நுழைவாயிலுக்கு அருகே அமைந்துள்ள மும்பை தாஜ் ஹோட்டலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 12:30 மணியளவில் பாகிஸ்தான் கராச்சி நகரிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவர்கள் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளனர்.
இதேபோல், 2008ஆம் ஆண்டு, மும்பை தாஜ் ஹோட்டல் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானது. இதில், சிக்கி 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் 60 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து, 2012ஆம் ஆண்டு புனே யேர்வாடா சிறையில் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மும்பை தாஜ் ஹோட்டல், ட்ரிடென்ட் ஹோட்டல், யூத மையம் ஆகியவை பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.