மும்பையின் வரலாற்றில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி என்பது மீளமுடியாத துயரை ஏற்படுத்திய தினம். அன்றுதான் கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், காமா மருத்துவமனை, நாரிமன் ஹவுஸ் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானது. நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரத் தாக்குதலில் பொதுமக்கள், வெளிநாட்டினர், காவல் துறையினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.