இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக நாட்டிலுள்ள அனைத்து ரயில்களின் சேவைகளும் முடக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து ரயில் சேவை தொடங்கியது.
இருப்பினும், பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வாய்ப்பு இருப்பதால் பெருநகரங்களிலுள்ள மின்சார ரயில் சேவைகளைத் தொடங்க ரயில்வே துறை தயக்கம் காட்டியது. இந்நிலையில், மும்பையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு உதவும் வகையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி, இன்றுமுதல் விரார் - தஹானு சாலை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் - தானே, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் - பன்வெல் ஆகிய வழித்தடங்களில் காலை 5.30 மணிமுதல் 11.30 மணிவரை ரயில்களை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 15 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில்களில் மாநில அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, உரிய அடையாள அட்டையைக் காண்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.