ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் அங்கம் வகிக்கும் ஜியோவில் மூன்று மாதங்களாக அதிக அளவில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.
இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை அடைந்துவிட்டதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். மார்ச் 31, 2020க்குள் இந்த நிலையை அடைந்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாகவே இலக்கை அடைந்து விட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த வாரம் முகேஷ் அம்பானி 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 8 ஆவது இடத்தை பிடித்திருந்தார்.
இவ்வேளையில் அவர் தற்போது ஆல்ஃபாபெட் இணை நிறுவனர் லாரி பேஜை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் ஆகியோரைப் பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்திய ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.44 லட்சம் கோடி) ஆக இருக்கிறது. குறிப்பாக அவர் சொத்து மதிப்பு 22 நாட்களில் மட்டும் ரூ.7.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
ஆல்ஃபாபெட் இணை நிறுவனர் லாரி பேஜ் 7ஆவது இடத்திற்கு சென்றார். 5ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க தொழிலதிபர் ஸ்டீவ் பால்மரின் நிகர சொத்து மதிப்பு 74.6 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.62 லட்சம் கோடி) இருப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.