டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உத்யானோத்சவ் எனப்படும் நந்தவன விழா நாளை மறுநாள் தொடங்கிறது. இதனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, முகல் தோட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படும் எனக் குடியரசுத் தலைவர் மாளிகை தோட்ட கண்காணிப்பாளர் பி.என். ஜோஷி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும்விதமாக அமைந்துள்ள இந்தத் தோட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுலீப் மலர்கள், 138 வகையான ரோஜாக்கள், 70 வகையான பூக்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களைக் கவரும்.
முகல் தோட்டங்களைக் கடந்தாண்டு 5.18 லட்சம் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாது 2003ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மூன்று முதல் ஆறு லட்சம் பார்வையாளர்கள் அதிகரித்துவருகின்றனர். அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவதால் சில பிரச்னைகள் நேரிடுகின்றன.
அதுவும் குறிப்பாக தோட்டங்களைப் பார்வையிட வரும் மக்கள் தங்களது குழந்தைகளை இந்தத் தோட்டத்தில் பூவை பறிக்காதவகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் செல்ஃபி எடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். செல்ஃபியின்போது சிலர் பூ, செடிகளை மிதித்துவிடுகின்றனர்.
பாதுகாப்புத் தேவையான இடங்களில் தடுப்புகள் இருக்கும். எங்கள் தோட்ட ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். தோட்டத்தை பராமரிப்பது கடினமான பணியாகும்.
முகல் தோட்டங்களுக்கு வரும் பார்வையாளர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியத்தையும் பார்க்கலாம். இந்தத் தோட்டத்தைப் பார்வையிட பார்வையாளர்கள், மார்ச் 8ஆம் தேதிவரை திங்கள் தவிர மற்ற நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை திறந்திருக்கும்" என்றார்.