காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு இந்துத்துவ இயக்கங்கள் ஆதரவாக இருப்பதை நீண்டகாலமாக பார்க்க முடிகிறது. கோட்சேவுக்கு எதிராக பேசுபவர்களை மிரட்டுவதும், காந்தியை இகழ்ந்து கோட்சேவை புகழ்வதையும் அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன், கோட்சே என்னும் இந்துதான் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி என குறிப்பிட்டு பேசியதற்கு பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேபோல் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர், கோட்சே ஒரு தேசபக்தர்; அவர் தீவிரவாதி அல்ல என பேசி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நான் தேசப்பிதா காந்தியை மதிப்பவள் என பேட்டி கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீப காலமாக இவ்வாறு எழுந்த கோட்சே சர்ச்சைகள் ஏராளம்.
இந்நிலையில், மும்பை அரசின் எம்.டி.என்.எல். (Mahanagar Telephone Nigam Limited) நிறுவனம், நீட்டா அம்பானி பெயரில் உள்ள போலி சுட்டுரை கணக்கு ஒன்றின் மூலம் கோட்சே பற்றி பதிவிட்டதை தங்கள் அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தின் மூலம் ரீ-ட்வீட் செய்தது. அதில், இந்துக்கள் கோட்சேவுக்கு ஆதரவு தெரிவிக்கவே தயங்குகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தைமூர் என பெயர் வைக்கின்றனர், அதை எண்ணி பெருமைகொள்ளவும் செய்கின்றனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ரீட்வீட் செய்யப்பட்ட போலி அக்கவுண்ட் பதிவு இந்தப் பதிவு குறித்து சுட்டுரையில் பெரும் சர்ச்சை எழுந்தது. எம்.டி.என்.எல். நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தின் பெயரை கோட்சேவின் அதிகாரப்பூர்வ பக்கம் என பெயர் மாற்றம் செய்துகொள்ளுங்கள் என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு எம்.டி.என்.எல். நிறுவனம் அந்த ரீ-ட்வீட்டை அழித்ததுடன், வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
எம்.டி.என்.எல். வெளியிட்ட அறிக்கை அதில், எம்.டி.என்.எல். நிறுவனம் குறிப்பிட்ட அந்த ட்வீட்/ரீ-ட்வீட்க்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் தேசப் பிதா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள், சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.