தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடுக்கடலில் எரிந்த கப்பல் : தற்போது என்ன நிலைமை? - இந்திய கடற்படை ட்வீட்

டெல்லி : குவைத்திலிருந்து இந்தியாவுக்கு 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் ஏற்பட்ட தீ, தற்போது முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

Indian Navy on MT New Diamond stable
Indian Navy on MT New Diamond stable

By

Published : Sep 13, 2020, 2:10 PM IST

அமெரிக்காவின் பனாமாவுக்கு சொந்தமான 'தி நியூ டைமண்ட்' என்ற கப்பல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு குவைத்தின் மினா அல் அஹ்மதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டது.

கடந்த வாரம் இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கப்பலில் 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய் இருந்ததால் பெரும் தீ விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது.

'தி நியூ டைமண்ட்' கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க இந்திய அரசு சார்பில இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில் கடும் போராட்டங்களுக்குப் பின், கப்பலில் ஏற்பட்ட தீ முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியக் கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில், "தற்போது 'தி நியூ டைமண்ட்' கப்பல் நிலையாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. இந்தியக் கடற்படையிலுள்ள வேதியியலாளர் மற்றும் கடற்படை கட்டுமானப் பிரிவைச் சேர்ந்த ஐந்து பேர் இன்று கப்பலில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடவுள்ளனர்.

அதேபோல இந்திய மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் நீரின் கீழ் இருக்கும் கப்பலின் நிலைமை குறித்து ஆய்வு செய்கின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த வாரம் இந்தியக் கடற்படை அலுவலர் ஒருவர் கூறுகையில், "எஞ்சின் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதான எரிபொருள் டாங்க் வரை தீ பரவவில்லை. சரக்குகள் சேமிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தீ பரவவில்லை.

இருப்பினும், கப்பலில் சுமார் இரண்டு மீட்டர் வரை விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் விரிவடைந்தால், அது கப்பலின் நிலைத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும். இப்போது வரை அந்த விரிசல் விரிவடையவில்லை. அதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து சோதனை : இந்தியாவில் என்ன நிலைமை?

ABOUT THE AUTHOR

...view details