கோழிக்கோடு (கேரளா): முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், பிடிஐ செய்தி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான எம்.பி. வீரேந்திர குமார் மாரடைப்பால் காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த வீரேந்திர குமார் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இவருக்கு வயது 84. உடல்நலக் கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மே 28ஆம் தேதி இரவு 11 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
வீரேந்திர குமாருக்கு மனைவி, மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மகனான எம்வி ஸ்ரேயம் குமார், மாத்ருபூமியின் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார். வீரேந்திர குமார் 1987ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் தனி இடத்திற்காக நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் சுதந்திர வேட்பாளராக நின்று வீரேந்திர குமார் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அவரது இறுதி சடங்குகள் நாளை வயநாட்டில் வைத்து நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வீரேந்திர குமார் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக மூன்று முறை பணியாற்றினார். அவர் இறக்கும்போது இச்செய்தி நிறுவனக் குழுவின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது ட்விட்டர் பக்கததில் பதிவிட்டுள்ள இரங்கலில், “மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. வீரேந்திர குமார் மரணம் சோகமானது. அவர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை. அவர் ஒரு அனுபவமிக்க பத்திரிகையாளர் மட்டுமில்லாமல் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட“ என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டில், “காலத்தின் கோலத்தால் அவர் இப்போது நம்முடன் இல்லை. அவர் ஒரு திறமையான ஆளுமை. ஏழைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர். அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்றார்.
ராகுல் காந்தி தெரிவிக்கையில், “மாத்ருபூமி நிர்வாக இயக்குநரும், எழுத்தாளருமான எம்.பி. ரவீந்திர குமாரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.