தாயின் அன்புக்கு இந்த உலகில் ஈடு இணை இல்லை. தாய்ப் பாசத்திற்கு நிகர் தாய்ப் பாசமே. இது ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டுமல்லாமல், ஐந்து அறிவு கொண்ட வாயில்லா ஜீவன்களுக்கும் இருப்பதே கூடுதல் வியப்பு. தாய்ப் பாசத்தை நிரூபிக்கும் நிகழ்வுகள் உலகில் ஏதோ ஒரு மூலையில் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும்.
அப்படியான ஒரு நிகழ்வு தான் தெலங்கானா மாநிலத்தில் தற்போது அரங்கேறியுள்ளது. 'நீ இரு உன்ன கூப்பிட நா வரேன்' என்று ஸ்கூட்டரில் புறப்பட்ட அன்புத் தாயின் பயணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய்ப் பாசத்திற்கு முன்னால் மிகக் கடினமான சவால் கூட கால் தூசிக்குச் சமம் என்பதற்கு இச்சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டு.
தெலங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டத்தில் போதா பகுதியைச் சேர்ந்தவர் ரசியா பேகம். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல வருடங்களுக்கு முன்பே கணவரை இழந்த பேகம், தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரின் மூத்த மகன் பொறியல் பட்டதாரி. இரண்டாவது மகன் நிஜாமுதீன், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு சிறப்புப் பயிற்சி வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இச்சூழலில் நிஜாமுதீன் தனது நண்பனின் தந்தை உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவனுடன் சேர்ந்து ஆந்திரா மாநிலத்திலுள்ல நெல்லூருக்குச் சென்றுள்ளார். இவர் சென்ற சமயத்தில் தான் இந்தியா கரோனாவின் தீவிரத்தை உணர ஆரம்பித்தது. அதனால் தேசிய ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நிஜாமுதீனுக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியது.
அனைத்து வகை போக்குவரத்துகளும் தடைபட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நெல்லூரில் தவித்திருந்தார். ஊருக்குச் செல்வதற்காக அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. நெல்லூரில் சிக்கிக்கொண்டு செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்த அவர் தன் தாயிடம் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். இதைக் கேட்டு துயரமடைந்த ரசியா பேகம், எப்படியாவது அவரை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.