கரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் சூழலில் தாயகம் திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரபு நாடுகளான துபாய், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்துவருகின்றனர். இவர்கள் வெளியுறவுத் துறை உடனடியாகத் தங்களை மீட்டு தாயகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக துபாயிலிருந்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய நியூட்டன் என்ற இளைஞர், ”நாங்கள் சுமார் ஆயிரம் தமிழர்கள் தாயகம் வர முடியாமல் தவித்துவருகிறோம். எங்களுக்குத் தற்போது வேலை, ஊதியம், உணவு, தங்குமிடம் எதுவும் இல்லை. இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, வெளியுறவுத் துறை மூலம் எங்களைத் தாயகம் அழைத்துச் செல்ல வேண்டும். எங்களை இப்போது அழைத்து வரவில்லையெனில், நாங்கள் மரணத்துக்குப் பின்தான் தாய்நாடு திரும்புவோமோ என்ற ஐயமும் பயமும் எங்கள் மத்தியில் நிலவிவருகிறது” என உருக்கத்துடன் தெரிவித்தார்.
இதேபோல் கத்தார் நாட்டிற்கு ஒப்பந்தப் பணியில் சென்ற 100 தமிழர்களும் மார்ச் 25ஆம் தேதி ஒப்பந்தம் முடிந்த பிறகு தாயகம் திரும்ப முடியாமல் திணறிவருகின்றனர். அதில் ஒருவர் கூறுகையில், "நாங்கள் 45 பேர் வேலைக்காக கத்தார் வந்தோம். கடந்த மார்ச் 25ஆம் தேதியோடு எங்களது பணிகள் முடிவடைந்துவிட்டன.
ஆகவே, எங்களுக்கு இப்போது ஊதியம் தங்குமிடம் எதுவும் இல்லை. நமது அண்டை மாநிலமான கேரளம் தன்னுடைய மாநில மக்களைத் தாயகம் அழைத்து வந்துள்ளது. அதைப்போலவே, எங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு தனது விமானங்களை அனுப்பாத சூழலில், சிறப்பு விமானங்கள் தரையிறங்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக தொடர்ந்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர கடந்த 60 நாள்களில் ஆறு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.