புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் 21 நாள்கள் பூட்டுதல் (லாக்டவுன்) அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். ஏழை-எளிய மக்களின் வருமானம் முற்றிலுமாக தடைப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு 1.70 லட்சம் கோடி நிவாரண திட்டங்களை அறிவித்தது. அதில் பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குளில் மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 வரவு வைக்கப்படும் என்ற திட்டமும் ஒன்று.
இந்த நிலையில் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணங்களை உடனடியாக எடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பணத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளும் என்று வதந்திகள் பரவியது.
இது தொடர்பாக நிதியமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நாடு தழுவிய பூட்டுதல் நடவடிக்கையால் பெண்கள் குடும்பத்தை நடத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிகிறோம்.
தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை சமாளிப்பதற்கு மூன்று மாதத்துக்கு தலா ரூ.500 கிடைக்கும். இந்தப் பணத்தை நீங்கள் எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். பணத்தின் பாதுகாப்பு குறித்து வரும் எந்த வதந்தியையும் நீங்கள் நம்ப வேண்டாம்.
ஜன்தன் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம் பாதுகாப்பானது என்று நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். ஆகவே பணத்தின் பாதுகாப்பு குறித்த எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்.
நீங்கள் உடனடியாக பணத்தை எடுக்காவிட்டாலும், கணக்குகளில் இருந்து பணம் திரும்பப் பெறப்படாது” என கூறப்பட்டுள்ளது.
இந்த வதந்தியின் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளில் மக்கள் வரிசை நீண்டு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.