தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை' - தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

டெல்லி: சர்ச்சைக்குரிய சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை !
எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை !

By

Published : Jul 31, 2020, 2:49 AM IST

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடங்கி சேலம் வரை ரூ.10,000 கோடி செலவில் 274 கிலோமீட்டர் தூரத்திற்கு எட்டு வழி நெடுஞ்சாலை திட்டத்தைச் செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் வளமான விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முடிவெடுத்திருந்தது. பசுமை வழிச்சாலை என்ற பெயரில் வேளாண் நிலத்தை அபகரிப்பதாகக் கூறி இத்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இத்திட்டத்தை எதிர்த்து 2019ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

இந்த வழக்கை அண்மையில் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்றபோது மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அனைத்துத் திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை" என்று கூறினார்.

இந்தத் திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, எந்த நிலைப்பாட்டையும் எடுத்திராத மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக, ஜூலை 29ஆம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இதே கருத்தை நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இத்திட்டத்திற்கான மத்திய அரசின் அப்பட்டமான ஆதரவைத்தான் அவர்கள் சமர்பித்த அறிக்கை காட்டுகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை மறந்து, தற்போது அதற்கு எதிராகவே அமைச்சகம் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் என்பதால் அமைச்சகம் தனது நிலைப்பாட்டைத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details