தான் சமூக வலைதளங்களைவிட்டு விலகுவது குறித்து சிந்தித்துவருவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மார்ச் 3) ட்வீட் செய்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இது குறித்து முன்னாள் ராணுவ வீரரும் பாஜக தலைவருமான மேஜர் சுரேந்திர பூர்ணியா தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக ஊடகங்களில் உங்களின் இருப்பு, மதிப்பு, கலாசாரம் ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் எதிரான மிகப்பெரிய சக்தியாகும்.
கோடிக்கணக்கான தேசபக்திமிக்க இந்தியர்களின் குரலாகவும் முகமாகவும் இருப்பவர் நீங்கள்தான். எனவே, தயவுசெய்து சமூக ஊடகங்களைவிட்டு வெளியேற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
சிரோமணி அகாலி தளம் தலைவர் மகேங்திர சிங், "வெற்றியடைபவர்கள் ஒருபோதும் முயற்சியைக் கைவிடமாட்டார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.
சிவசேனா முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி, "ஒரே ட்வீட் மூலம் நாடே பரபரப்பிற்குள்ளாகியுள்ளது. இதுவே அவரது சக்தி, இது அவருக்கும் தெரியும். நீங்கள் விரும்பும்வரை அவரைக் கிண்டல் செய்துகொள்ளுங்கள். சமூக ஊடகங்களில் இப்போது நாம் காணும் வெறுப்பையும் பிளவுகளையும் குறைக்க அவரது ட்வீட் உதவும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம் இந்தியா வருகைக்குமுன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "பேஸ்புக்கில் மிக பிரபலமாக உள்ளவர் நான் என்றும் இரண்டாவதாக மிக பிரபலமாகவுள்ளவர் மோடி என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் என்னிடம் கூறினார்" என்று பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
இதையும் படிங்க: 20 உறுப்பினர்களுடன் இங்கு வந்தால் நீங்கள்தான் முதல்வர் - காங்கிரஸ் எம்எல்ஏவின் அதிரடி ஆப்பர்