புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி, நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது, புதுச்சேரி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நாடு முன்னேற்றத்திற்கு பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.