குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜாமிய மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பத்தையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்,"குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதுஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது. விவதாதம்,கலந்துரையாடல் மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதிகள். ஆனால் இதுபோன்று பொதுச் சொத்துக்கு சேதத்தை ஏற்படுத்துவது நமது நெறிமுறையல்ல. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியாவின் பழமையான நல்லிணக்கம், சகோதரத்துவம், இரக்கம் ஆகியவற்றை விளக்குகிறது.
எனது சக இந்தியர்களுக்கு சந்தேகத்திற்கிடமின்றி ஒன்றை நான் உறுதியளிக்கிறேன். இந்தச்சட்டமானது எந்த ஒரு இந்திய குடிமகனையும் பாதிக்காது. இந்தச் சட்டம் குறித்து எந்தவொரு இந்திய குடிமகனும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தச்சட்டமானது பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இந்தியாவைத்தவிர வேறு எங்கும் செல்லமுடியாத நிலையில் இங்கு வந்த மக்களுக்கானது.