டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சட்டப்பேரவைக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 11ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும்.
இந்தத் தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதிலும் குறிப்பாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆம் ஆத்மியும், தலைநகரில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அந்தத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தது. பின்னர் டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சில பல சறுக்கல்களைச் சந்தித்தாலும் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவுள்ளார்.
இருப்பினும் கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக, 57 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதோடு டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றி ஆளும் ஆம் ஆத்மிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதில் 18 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்று ஆம் ஆத்மி ஐந்து தொகுதிகளில் மூன்றாம் இடமே பிடிக்க முடிந்தது.
எனினும் இந்தத் தோல்வியைக் கண்டு துவளாத டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் தங்களின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்து தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைத்து கொண்டேதான் இருக்கின்றனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த வகையில் கல்விக்காக 35 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ததோடு பாடத்திட்டங்களில் பல புதிய பாடங்களை இணைத்ததும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுகாதாரத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 12 ஆயிரம் மக்களுக்கு ஒரு டாக்டர், மருந்தாளுநர், ஒரு மருத்துவ உதவியாளர் அடங்கிய முஹல்லா கிளினிக்குகளை தொடங்கியதும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் நன் மதிப்பை ஏற்படுத்தியது.
இது தவிர, டெல்லியின் முக்கியப் பிரச்னையாக பார்க்கப்படும் பெண்கள் பாதுகாப்புக்குத் தீர்வு காணும் வகையிலும் கடந்த அக்டோபர் மாதம் முதல் அங்கு புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி பெண் பயணிகள் டெல்லி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய முடியும். இதன்மூலம் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதோடு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200 முதல் ரூ.1800 வரை மிச்சமாகிறது.
மேலும் தண்ணீர் வரியைப் பாதியாக குறைத்தது. 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் போன்றவையும் அளித்து மக்களின் நம்பிக்கையை ஆம் ஆத்மி அரசு சம்பாதித்துள்ளது. இது டெல்லி அரசுக்கு அனைத்து தரப்பின மக்களிடம் இருந்தும் ஆதரவை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே பெருவாரியான டெல்லிவாசிகள் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த நடுத்தர மக்களும் கூட நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றனர்.
நல்லாட்சி கொள்ளைகளை பின்பற்றும் ஆம் ஆத்மி அரசு, முரண்பாடான நெறிமுறை அடையாளங்களுக்கும் பொருளாதார வகுப்புகளுக்கும் இடையில் நியாயமான சமநிலையை ஏற்படுத்தியது. இதனாலேயே டெல்லியில் வசிக்கும் பிற மாநில மக்களும் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்கின்றனர். தனது வைசியா கொள்கைகளையும் அமைதியாகப் பரப்பும் கெஜ்ரிவால், வைசியா சமூகத்தினரின் ஆதரவையும் பெற்றுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் பல முக்கியத் தலைவர்கள் விலகினாலும் அக்கட்சியின் முக்கிய அடையாளமாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆறு ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் எளிமையான முதலமைச்சராக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இது பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பெரிய தலைவர்களிடமிருந்து கெஜ்ரிவாலை தனித்துக் காட்டுகிறது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர். இதனை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்க்கப்போவது யார் என பரப்புரைக் கூட்டங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாஜக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவைகளை முக்கியமானதாக தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்த நினைத்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வியைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் பிரச்னைகளில் பாஜகவினர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
அப்படி பார்க்கையில் டெல்லி தேர்தலில் பாஜகவிற்கு கைகொடுக்கும் ஆயுதமாக 1,731 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கும் மோடி அரசின் புதிய சட்டம் அமைந்துள்ளது. இதன்மூலம் 40 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சியமைத்தால் தற்போது இருக்கும் கட்டணத்தை விட ஐந்து மடங்கு குறைவான கட்டணத்தில் தண்ணீர் மின்சாரம் வழங்கப்படும் என்று டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இருப்பினும் இவை ஏதும் மக்களைப் பெரிய அளவில் ஈர்த்ததாகத் தெரியிவில்லை.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் மனங்களை மாற்றப்போகும் மூன்று முக்கிய காரணிகளாகப் பார்க்கப்படுவது சுகாதாரம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு ஆகியவையே உள்ளன. ஏனெனில் இதற்கு முன்பு டெல்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் மேற்கூறிய பிரச்னைகளில் சிறிய தீர்வுகளை மட்டுமே கண்டன. அதற்குக் காரணமாக டெல்லி அரசிடம் உள்ள குறைந்த நிதியையும், அதிகாரத்தையும் குறிப்பிட்டனர். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட அதே பிரச்னைகளை ஆம் ஆத்மி அரசு தீர்வு கண்டுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், மோடிக்கு எதிராகப் போராடும் தனி நபர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு தேசிய பிரச்னைகளிலும் மோடியை கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்து வருகிறார்.
இதே சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்தால் அது தங்களுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்துள்ள பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மியின் வாக்காளர்களை பிரித்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே உள்ளனர். டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்ஷித்தின் மறைவுக்குப் பின் டெல்லி காங்கிரஸ் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளது.
இது போன்ற காரணங்களால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸை வாக்கைப் பிரிக்கும் கட்சியாக மட்டுமே வாக்காளர்கள் பயன்படுத்துவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். யார் என்ன கூறினாலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பது எப்போதும் ஒன்றாக இருந்ததில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள்:
கட்சி | 2013 | 2015 |
ஆம் ஆத்மி கட்சி | 29.5 % வாக்குகள் / 28 தொகுதிகள் | 54.3 % வாக்குகள் / 67 தொகுதிகள் |
பாஜக | 33.1 % வாக்குகள் / 32 தொகுதிகள் | 32.3 % வாக்குகள் / 03 தொகுதிகள் |
காங்கிரஸ் | 24.6 % வாக்குகள் / 16 தொகுதிகள் | 9.7 % வாக்குகள் / 00 தொகுதிகள் |