கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனிடையே, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - பிரதமர் மோடி பதில் - ஊரடங்கு குறித்து மோடி
டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க நிபுணர்கள் ஆலோசனை கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மோடி, "நாட்டில் சமூக அவசர நிலை நிலவிவருகிறது. எனவே, கடினமான முடிவுகள் எடுப்பது முக்கியத்துவம் பெறுகிறது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநிலங்கள், மாவட்ட நிர்வாகங்கள், நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்" என்றார்.