மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களிடையே பாஜகவை கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சி சார்பாக மாநிலம் முழுவதும் துர்கா பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்விழா ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ”இந்தியாவிற்கே மேற்கு வங்க மாநிலம் முன்மாதிரியாக திகழ்கிறது” எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வரலாற்றில் தேவை ஏற்படும்போதெல்லாம் பாதையை வகுத்த மேற்கு வங்க மாநிலம், இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் இருந்து வந்த பல தலைவர்கள் நாட்டை சரியான பாதையில் வழி நடத்தியுள்ளனர். நாட்டின் ஒற்றுமையையும் பலத்தையும் துர்கா பூஜா விழா பறைசாற்றுகிறது. மேற்கு வங்கத்தில் கலாச்சாரத்தை எடுத்துரைக்கிறது.
சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், எழுத்தாளர்கள் போன்ற எண்ணில் அடங்காதவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்களைக் கணக்கெடுத்தால் அவர்களின் பெயர்களை வெளியிட இந்த ஒரு நாள் போதாது.
துர்க்கை தேவியின் ஸ்வரூபமாக பெண்கள் விளங்குகின்றனர். பெண்களை அதிகார மையமாக வைத்து பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜா விழாவின்போது அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.