2005 - 2012 வரை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய ரூ.94 கோடியே 6 லட்சம் நிதியில் ரூ.43 கோடியே 69 லட்சம் பணத்தில் கையாடல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. பின்னர், அந்த வழக்கில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரின் பெயர்களும் இணைக்கப்பட்டன.
இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், ஃபரூக் அப்துல்லா மீது சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கு தொடர்பாக, ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை நேற்று (அக்டோபர் 19) விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையானது, பழிவாங்கும் செயல் என்று அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சுரி வெளியிட்டுள்ள குறிப்பில், "ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற பண முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான ஃபரூக் அப்துல்லாவிடம் விசாரணை மேற்கொண்டிருப்பது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே அன்றி வேறொன்றுமில்லை.
நீக்கப்பட்ட சிறப்புரிமையையும், மாநில அந்தஸ்தையும் திரும்ப வழங்கக்கோரி கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக, காஷ்மீரில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் கூட்டணியைக் கண்டு அச்சம் கொண்ட மத்திய அரசு, அமலாக்கத்துறையை வைத்து ஃபரூக் அப்துல்லாவை அப்பட்டமாக மிரட்டுகிறது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அவரை இதுபோன்ற மிரட்டல் தந்திரங்களால் அடக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது.
எதிர் முகாம்களைச் சேர்ந்தவர்களை வீழ்த்துவதற்கு நேர்மையற்ற வழிகளில் இறங்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வியடையும். ஒற்றுமையே வெல்லும்" என்று அவர் கூறினார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வலியுறுத்தி ஃபரூக் அப்துல்லா தலைமையில் ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி நிறைவேற்றிய குப்கார் தீர்மானம் குறித்து அண்மையில் ஆலோசனை நடத்தியது கவனிக்கத்தக்கது.