சிபிஐ (எம்) கட்சியின் தலைமைக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் மெய்நிகர் வழியே பேசிய யெச்சூரி, "மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் மோசமான பல திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. தன்னம்பிக்கை இந்தியா என்ற பெயரில், சரண்டர் இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என பலவும் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தனியார்மயமாக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் துணை நட்பு நாடாக இந்தியாவை மாற்றுவது என்பதே பிரதமர் மோடி தலைமையிலான அரசின் வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. சீனாவுடன் நடந்து வரும் எல்லை நெருக்கடியைத் தீர்க்க சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை அரசு உணர வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் ஒற்றை எண்ணத்துடன் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்துகிறது. இந்திய அரசியலமைப்பின் ஒவ்வொரு ஜனநாயக சாரமும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. மக்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
அனைத்துமே இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதில் சுயாதீனமாக செயல்படுவதை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் என்றுமில்லாத அளவுக்கு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. மத்திய அரசிற்கும் அதன் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிராக எழும் எந்தவொரு கருத்தும் அல்லது எதிர்ப்புக் குரலும் 'தேச விரோதம்' என்று அழைக்கப்படுகின்றன.
கேள்விக் கேட்போர் மீது உபா சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், தேச துரோகம் வழக்கு போன்ற கடுமையான சட்டங்கள் ஏவப்படுகின்றது" என தெரிவித்தார்.