மக்களவையில் இன்று நடப்பு கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ட்யூப் லைட் எனக் கூறிய கருத்து மக்களவையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத நிலை அதிகரித்து வருவதால் விரைவில் பிரதமர் மோடியை இளைஞர்கள் அனைவரும் தடியால் அடிக்க போகின்றனர் என ராகுல் காந்தி அண்மையில் விமர்சித்திருந்தார்.
இது குறித்து மக்களவையில் மோடி, நான் தற்போது தினமும் யோகா செய்யும்போது சூரிய நமஸ்காரம் செய்யும் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறேன். எனவே எத்தகைய அடியையும் தாங்கும் பலத்தை எனது உடல் தற்போது பெற்றுள்ளது என கிண்டலான தொனியில் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த பேச்சை ராகுல் காந்தி இடைமறித்து கருத்து கூற, ராகுல் தனது இருக்கையிலிருந்து எழுந்து பேச முயன்றார். அப்போது உடனடியாகக் குறுக்கிட்ட மோடி, நான் 40 நிமிடத்திற்கும் மேலாக உரையாற்றிவருகிறேன். ஆனால் எனது பேச்சின் கரன்ட் ராகுல் காந்தியை இவ்வளவு தாமதமாகவே அடைந்துள்ளது. என்ன செய்ய பல ட்யூப் லைட்டுகள் இப்படிதான் லேட்டாக எரிகின்றன என நக்கலாகத் தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
மக்களவையில் மோடியின் நக்கல் பேச்சு இதற்கு முன்னர் மக்களவையில் மோடி வருகை தந்தபோது பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். அதற்கு பதிலடி தரும் விதமாக மகாத்மா காந்தி சிந்தாபாத் என காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இதையும் படிங்க: ஹனுமன் சாலிசா பாடல் விவகாரம்: யோகிக்கு கெஜ்ரிவால் பதிலடி