உத்தரபிரதேசம் மாநிலத்தின் பட்டபர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஜூன் மாதம்29 ஆம் தேதியன்று தண்ணீர் பம்பிலிருந்து குடிநீரை பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
அதியுயர் மின்சார இணைப்பில் இருந்து வெளிப்பட்ட பாய்ச்சலில் அந்த சிறுவன் அங்கேயே மரணமடைந்ததாக அறிய முடிகிறது.
அதே நாளில், மாவட்ட மேம்பாட்டு அலுவலரும் (டி.டி.ஓ) அந்த கிராமத்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் செய்தி வெளியே தெரிந்தால் பிரச்னையாகும் என கருதி டி.டி.ஓ, கிராமவாசிகளை வைத்து அந்த சிறுவனை சேர்ந்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.
இருப்பினும், அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த கிராமத்தின் தலைவரும், ஊராட்சி நிர்வாகமும் உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்த எதிர்ப்பையும் மீறி அவனை அவசரமாக அடக்கம் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எந்தவொரு மேலதிக விசாரணையையும் நடைபெறாமல் தவிர்க்க விரும்பிய ஊராட்சி நிர்வாகம் இதனை செய்துள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு உயிரிழந்த சிறுவனின் தந்தை கடிதங்களை எழுதி கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கை மேற்பார்வையிட்டு முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று சந்தேக மரணமடைந்த சிறுவனின் உடல் கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.