மத்தியப்பிரசேதம் மாநிலத்தில் சாகர் மாவட்டத்தில் பர்கேதி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மார்ச் 14ஆம் தேதி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதையறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், சிறுமி மார்ச் 13ஆம் தேதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, பின்பு தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையில் அச்சிறுமியின் குடும்பத்தினர் மார்ச் 13ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து அச்சிறுமியின் உறவினர் மற்றும் சகோதரர் உறவுமுறை மூன்று பேரை காவல் துறையினர் விசாரித்தனர்.
இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் தங்கள் 'பாணியில்' மீண்டும் விசாரித்தனர். அப்போது சிறுமியை சகோதரர் உறவுமுறை கொண்ட மூன்று பேர் பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் உறவினரான சுசிலா, பன்சி லால் ஆகியோர் உதவியுடன் கொலை செய்திருப்பதைஒப்புக்கொண்டனர்.
சிறுமி படுகொலை-4 பேர் கைது இது குறித்து நேற்று (மார்ச் 20) சாகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி கூறுகையில், 'சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, தலை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சுசிலா, பன்சி லால், சகோதரர் உறவுமுறை கொண்ட இருவர் உள்பட நான்கு பேரை மார்ச் 18ஆம் தேதி கைது செய்துள்ளோம். மேலும் தப்பியோடிய சகோதரர் உறவுமுறை கொண்ட ராம் பிரசாத் என்பவரை தேடிவருகிறோம்' எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.