தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பியில் தொடரும் குற்றங்கள் - என்னதான் தீர்வு!

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஷாம்லி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

minor allegedly raped
minor allegedly raped

By

Published : Oct 21, 2020, 2:02 PM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்ந்துவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரேதச மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுகிறது.

அண்மையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்கு முன்பாக தொடர்ந்து இதேபோன்ற பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், தற்போது மற்றொரு சிறுமி ஒருவர் உ.பி-யில் பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள ஷாம்லி மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி இருந்ததை அறிந்த பக்கத்து வீட்டு நபர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.

இது குறித்து ஷாம்லி காவல் கண்காணிப்பாளர் நித்யானந்த் ராய் கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவரை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுமி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விரைவில் குற்றவாளிக் கைது செய்யப்படுவார்" என்றார்.

முன்னதாக, அலிகர் மாவட்டத்தில் அக்டோபர் 16ஆம் தேதி கர்ப்பிணி ஒருவர் தனது மாமனாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியபோது, இதை வெளியில் சொன்னால் விவாகரத்து செய்துவிடுவதாக கணவர் மிரட்டியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேபோல், அக்டோபர் 6 ஆம் தேதி கோரக்பூரில் காது கேளாத பெண் தனது சகோதரர் மற்றும் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடரும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மக்களிடையே மாநில அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் இது எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:சிறுமிகளிடம் பணம் காட்டி அழைத்த மின்வாரிய அலுவலர் போக்சோ சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details