கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவரும் நிலையில், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், கரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில், இந்தத் தேர்வுகளை மேலும் தள்ளி வைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த மத்திய அரசுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற உத்தரவை சீராய்வு செய்ய கோரி மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநில அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
"தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ள வேண்டும். எனவே, ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் பயணத்தை தவிர்க்கும் நோக்கில் மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையத்தையாவது அமைக்க வேண்டும்.