புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகை உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களைக் காவல் துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கே போடப்பட்டிருந்த தடுப்பு அருகே அவர்கள் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கியது போல், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டுமெனவும், அதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியும் இதுவரை ஆளுநர் கையொப்பம் இடாமல் காலம் தாழ்த்தி தடையாக இருந்து வருகிறார் எனவும் கூறினர். மேலும் ஆளூநர் அனுமதி அளிக்கும் வரை இந்த தர்ணா போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனையறிந்து சட்டப்பேரவையில் இருந்து நிகழ்விடத்திற்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமி மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.