கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேறு மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப நடைபயணமாக செல்லத் தொடங்கினர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் சொந்த வாகனங்களிலும், நடைபயணமாகவும் உத்தர பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா - மத்திய பிரதேச எல்லையான சேந்வா பகுதிக்கு வந்தபோது, மத்திய பிரதேச அரசு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அரசு வாகனத்தில் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தன.
இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் சேந்வா பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிக்கு ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு வழங்கப்படாததால், காவல்துறையினர் மீது கற்களை வீசு தாக்கினர். இது குறித்து அப்பகுதியில் தங்கியுள்ள சுனித் மிஸ்ரா பேசுகையில், ''நாங்கள் ஒரு மாதத்திற்கு மேலாக கைக்குழந்தைகளுடன் நடந்து வந்துள்ளோம். மகாராஷ்டிரா அரசு எங்களைக் கைவிட்டது. அதனால் எங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினோம். ஆனால் எங்கள் மாநில அரசே எங்களுக்கு சரியான நிவாரண உதவிகள் வழங்க மறுக்கிறது. நேற்று இரவிலிருந்து எங்களுக்கு உணவு வழங்கப்படவில்லை'' என்றார்.