கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே மாதம் 3ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 15 (இன்று) முதல் ரயில் சேவை இயக்கப்படும் என்ற தவறான தகவல் மும்பையில் பரவியது. இதை நம்பிய லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
ஏற்கனவே கோவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு உள்ளூர் தலைவர்கள் தொழிலாளர்களைக் கலைந்து செல்ல கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரம் வரை கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர். இறுதியில் காவல் துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் அங்குக் கூடிய தொழிலாளர்களுக்குத் தங்கும் இடமும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தொழிலாளர்கள் ஒன்று கூடியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரயில் சேவை தொடங்கப்படும் என்று பரவிய தவறான தகவல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இதுபோல் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் ராணுவ மருத்தவருக்கு கரோனா பாதிப்பு