தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 1:51 PM IST

ETV Bharat / bharat

சிறப்பு ரயில்களுக்கு கட்டணங்களை வசூலிக்கும் மபி அரசு - கமல்நாத் குற்றச்சாட்டு!

போபால்: மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராகக் குடிபெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Kamal Nath
Kamal Nath

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப ஏதுவாக ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்கிவருகிறது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு 85 விழுக்காடும், மாநில அரசு 15 விழுக்காடும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு மாறாகச் சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்கள் குடிபெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாக மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் இருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர், போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திலிருந்து பிகாரிலுள்ள தர்பங்கா ரயில் நிலையத்திற்குச் செல்ல தன்னிடம் இருந்து 575 ரூபாய் பெற்று டோக்கன்களை வழங்கியதாகவும், அதை ரயில் நிலையத்தில் கொடுத்து டிக்கெட்டுகளாக மாற்றிக்கொள்ள அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் கமல்நாத், "குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதற்காக அவர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், உண்மைக்கு முரணான பல விஷயங்களைக் கூறிவருகின்றன.

ரயில் டிக்கெட்டுகளுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாடுகள் இதுபோல எழுந்துள்ளன. இப்போது, ​​டிக்கெட்டுகளுக்கு மறைமுகமாகக் கட்டணம் வசூலிக்க மற்றொரு முறையை மாநில அரசு கண்டுபிடித்துள்ளது. போபாலில், டிக்கெட்டுக்கான பணம் வசூலிக்கப்பட்ட பின்னரே டோக்கன்கள் வழங்கப்படுகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பதிலளித்த பாஜகவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் துணைத் தலைவர் ராமேஸ்வர் சர்மா, "மத்தியப் பிரதேசத்தில் ஒரு பயணியிடம் இருந்து பணம் வசூலிக்கப்படவில்லை. முதலில் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச அரசைக் களங்கப்படுத்த முயன்றார், அது முடியாமல் போனதால் இப்போது இந்தப் போலியான குற்றச்சாட்டை கமல்நாத் எழுப்பியுள்ளார்" என்றார்.

மேலும், இது அரசியல் செய்யும் நேரம் இல்லை என்றும், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெற்பயிர் நடவு பணிகளுக்கு சிக்கல் இல்லை - பஞ்சாப் முதலமைச்சர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details