கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் சிரமப்பட்டுவருகின்றனர்.
இது தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தாமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களை 15 நாள்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், அவர்களின் திறன்களை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தையும் உருவாக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களையும் வீடு வாரியாகச் சேகரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளை ரத்து செய்யவும், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ரயில்கள் தேவை என்று மாநில அரசு கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்திற்குள் கூடுதல் ரயில்களை மத்திய அரசு இயக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் ஜூலை 8ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:உயிருக்கு உத்தரவாதம் இல்லை: உயர் நீதிமன்றத்தை நாடிய 2 வயது குழந்தை