தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நெடுஞ்சாலையில் குழந்தையை பெற்ற கர்ப்பிணி - 150 கிமீ நடந்த அவலம்!

போபால் : ஊரடங்கு உத்தரவால் நெடுஞ்சாலையில் குழந்தையை பிரசவித்த கர்ப்பிணிப் பெண், மருத்துவ உதவி பெறுவதற்கு 150 கி.மீ. தூரம் நடந்து சென்ற அவலம் அரசின் இயலாமையை காட்டுகிறது.

Migrant worker delivers baby on road, walks another 150 km to get help
நெடுங்சாலையில் குழந்தையை பெற்ற கர்ப்பிணி பெண் உதவி பெற 150 கி.மீ. நடந்த அவலம்!

By

Published : May 14, 2020, 5:03 PM IST

இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க மே 17ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் நீட்டித்து அறிவித்துள்ளன.

மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கால், சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், வெளிமாநிலத் தொழிலாளர்களின் வேதனை சொல்லில் அடங்காது நீண்டுகொண்டே இருக்கிறது. துன்பத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவது போல் தெரியவில்லை.

தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். கூலி தொழிலாளர்களின் பட்டினிச்சாவுகள் அதிகரித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். ஏறத்தாழ 18 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் இருந்து நடந்தே பயணத்தை மேற்கொண்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் சகுந்தலாவுக்கு, எவ்விதமான மருத்துவ உதவியும் கிடைக்காததால், மத்திய பிரதேசத்தின் சத்னாவில் நெடுஞ்சாலையோரத்தில் குழந்தையைப் பிரசவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல், பிரசவத்திற்கு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகும் எந்தவொரு உதவியும் கிடைக்காத நிலையில், அவரும் பிறந்த குழந்தையும் 150 கி.மீ தூரம் நடந்தே போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது கணவர் ராகேஷ் கவுல் கூறியபோது,"சகுந்தலா குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, நாங்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்தோம். பின்னர் மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடங்கி குறைந்தது 150 கிலோமீட்டர் தூரம் நடந்தோம்” என தெரிவித்தார்.

சட்னா மாவட்டத்தை அடுத்துள்ள அன்ஹெஹாரா பகுதியின் தொகுதி அலுவலர் ஏ.கே.ரே கூறுகையில், “தற்போது குழந்தையும் தாயும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுத்த நிர்வாகத்தால், அவர்களுக்கு தேவையான எவ்விதமான பயண உதவியும் செய்து தரப்படவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் தாய் - சேய் இருவருக்குமான உடல்நல பரிசோதனைகளை நடத்தினோம். மூவரும் தங்களது சொந்த மாவட்டத்திற்கு சென்றவுடன் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்றார்.

நெடுங்சாலையில் குழந்தையை பெற்ற கர்ப்பிணி பெண் உதவி பெற 150 கி.மீ. நடந்த அவலம்!

சகுந்தலா, ராகேஷ் போன்ற பல இடம்பெயர்ந்தோர் உணவு, தண்ணீர் இல்லாமல் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்லும் வழியெல்லாம் கடும் சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை அரசு கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க :மத்தியப் பிரதேசத்தில் விபத்து: புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 8 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details