இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 3ஆம் தேதிவரை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ள கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்துகொண்டு, நகரத்தை விட்டு வெளியேறிவருகின்றனர்.
இந்நிலையில், நீண்டதூரம் பயணப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கியுள்ளது.
இதுவரை மொத்தமாக 302 சிறப்பு ரயில்களில் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. இரண்டு மட்டுமே மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டுள்ளன என்பதை ரயில்வே தரவு காட்டுகிறது.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான ரயில்வே வழிகாட்டுதல்களின்படி, குடிபெயர்ந்த தொழிலாளர்களைத் தங்கள் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல இயக்கப்படும் ரயில்களை அனைத்து மாநிலங்களும் இயக்க பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
குடிபெயர்ந்தோரின் மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் ஜார்கண்ட், பிகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில்தான் மிகக்குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பிகார் 73 ரயில்களை இயக்க ஒப்புக் கொண்டுள்ளது. 17 ரயில்கள் அங்கு விரைந்துக் கொண்டிருக்கின்றன. மேலும், 15 ரயில்கள் அம்மாநிலத்திற்கு இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரியப்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் இதுவரை 88 சிறப்பு ரயில்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளது. தற்போது 33 சிறப்பு ரயில்கள் பயணத்தில் உள்ளன. மேலும் 21 பேர் தங்கள் பயணங்களை எதிர்வரும் நாள்களில் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்கண்ட் அரசு 13 ரயில்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை தனது மாநிலத்திற்கு அழைத்து வந்துள்ளது. மேலும் மூன்று ரயில்களை இயக்க வேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளது. ஒடிசா அரசு 20 ரயில்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்துள்ளது.
இது தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க அரசுக்கு எழுதிய கடிதத்தில், “குடிபெயர்ந்த வங்காளிகளை தனது மாநிலத்திற்கு திரும்பிவர மேற்கு வங்க அரசு அனுமதி அளிக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
302 ரயில்களில் 2 ரயில்கள் மட்டுமே இயக்கம்: வஞ்சிக்கப்படுகிறார்களா வங்காளத் தொழிலாளர்கள்! இதற்குப் பதிலளித்த மேற்கு வங்க அரசு, "கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சிக்கியிருக்கும் வங்காளிகளை மேற்கு வங்கம் அழைத்துவர 10 ரயில்களை இயக்கவுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :698 இந்தியர்களுடன் கொச்சிக்கு விரையும் ஜலாஷ்வா கப்பல்!