கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வேறு யாரும் அனுபவித்திராத அவலத்தை வெளிமாநில தொழிலாளர்கள் எதிர்கொண்டனர்.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாததற்கு முன்பு போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தங்களின் சொந்த கிராமங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றனர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், அவர்களில் பலர் இன்னமும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துவந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பேரிடர் காலத்தில் அலுவலர்களால் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது என்றார்.