கரோனா பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கில் தினசரி வேலைக்காக வந்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்தான் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் பவுரி, மஞ்சு தம்பதியினர், திரிபுரா மாநிலத்திற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யவதற்கு வருவார்கள். அப்படி வந்த நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தியதால் சஞ்சயும், கர்ப்பமாக இருந்த அவரது மனைவி மஞ்சுவும் சிக்கிகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இவர்களுடன் சேர்ந்து 63 தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. இதையடுத்து, இவர்கள் அனைவரையும் திரிபுரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தங்கவைத்து அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டுவந்தது.