இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு மாணவர் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட கட்டண உயர்வைக் கண்டித்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி ஒன்றை நடத்தினர்.
இந்தப் பேரணியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அம்மாநில காவல்துறையினர் ஈடுபட்ட போது மாணவர்களை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவ்விவராகங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என மாணவர் சங்கம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, மாணவர் அமைப்பு பிரதி நிதிகளுடன் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு சந்தித்தது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி, திரும்பிட வழி வகை செய்ய வேண்டும் எனக் குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.